Friday, November 14, 2014

அரசியல் தெளிவு பெற படிக்க வேண்டிய 10 நூல்கள்

1. பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)

எனது இந்தியா(எஸ்.ராமகிருஷ்ணன்)-3

எனது இந்தியா (டாக்கா மஸ்லின்) - எஸ். ராமகிருஷ்ணன்....

ஒரு மோதிர வளையத்துக்குள் டாக்​கா மஸ்லி​னால் ஆன புடவை ஒன்றை நுழைத்துவிடலாம். அந்த அளவு​க்கு அந்தத் துணி மிருதுவாக இருக்​கும் என்கிறார்கள். டாக்கா மஸ்லின் ஒரு காலத்​தில் உலகையே வியக்கவைத்த துணி ரகம். அது இன்று அடையாளமற்ற தொழிலாக, சிறுவணிகமாக சுருங்கிவிட்டது. இந்திய நெசவுத் தொழில்நுட்பத்தின் சாதனை​யாகக் கருதப்பட்ட மஸ்லின் நெசவு, பிரிட்​டிஷ் காலனிய ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி நசிந்துபோனது துயரமான வரலாறு. டாக்கா மஸ்லின் ஒடுக்கப்பட்டதற்கு முக்​கியக் காரணம், பிரிட்டிஷின் லங்காஷயர் மற்றும் மான்செஸ்டர் ஆகிய நகரங்களில், இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரித்த துணிகளை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவந்து தள்ள வேண்டும் என்ற வணிகத் தந்திரம்தான். பிரிட்டனின் மான்செஸ்டர் 'டி73’ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் ரகத்தைப் பூண்டோடு அழித்துவிட்டனர் என்கிறார்கள் வங்காளதேச நெசவாளிகள்.

மஸ்லின் நெசவு ஆந்திராவின் மசூலிப்பட்டி​னத்தில் பராம்பரியமாக நடந்த தொழில். அதனால்தான் அது மஸ்லின் எனப் பெயர் பெற்றது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மஸ்லின் நெசவுக்கு டாக்கா நகரம் புகழ் பெற்றிருந்தது. நுட்பமான வேலைப்பாடுகொண்ட இந்த நெசவுத் தொழிலில் இளம்பெண்களே அதிகமாக ஈடுபட்டனர். டாக்கா மஸ்லினுக்கு இணையாக தமிழகத்தில் ஆரணி மஸ்லின் தயாரிக்கப்பட்டது. இதுவும் பராம்​பரியமாகத் தயாரிக்கப்பட்டு வந்த ஒரு நெசவு முறையே. அதுபோல ஒரிசாவின் கேந்திரபாதா, ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்​பட்ட மஸ்லின் துணிகளும் இங்கிலாந்துக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன.


மஸ்லின் துணி ஏற்றுமதியில் 75 சதவிகிதம் லாபம் கிடைத்தது. மஸ்லின் துணிகளை வாங்குவதற்கு ஐரோப்பா முழுவதும் பலத்த போட்டி நிலவியது. அழகான உடைகள், திரைச்சீலைகள் மற்றும் நாடக அரங்குகளின் சித்திரத் திரைகள் ஆகியவை மஸ்லின் துணியால் தைக்கப்பட்டன. 10-ம் நூற்​றாண்டில் பிரெஞ்சுப் பெண்கள் மஸ்லின் ஆடைகளை அணிவதை பெருமையாகக் கருதினர். மார்கோபோலோ தனது பயணக்குறிப்பில் மஸ்லின் துணி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர், இந்தியத் துணி ரகங்கள் ஈராக்கில் உற்பத்தியானவை என்று குறிப்பிட்டு இருப்பதுதான் வரலாற்றுக் குழப்பமாகக் கருதப்படுகிறது. பாபிலோனிய நாட்டுப் பட்டியல்ஒன்றில், மஸ்லின் என்னும் துணி வகையைக் குறிக்கும் 'சிந்து’ என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. சிந்து என்னும் சொல் தமிழில் கொடியைக் குறிக்கும். கன்னடத்திலும் துளுவிலும் துணிக்குச் 'சிந்து’ என்று பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. இந்தத் துணி தமிழகத்தில் இருந்து பாபிலோனியாவுக்குக் கடல் வழியாகத்தான் சென்​றிருக்க வேண்டும் என்கிறார் ஆய்வாளர் டாக்டர் கே.கே.பிள்ளை.


டாக்கா மஸ்லின், மொகலாயர்கள் காலத்திலேயே புகழ்​பெற்றிருந்தது. மொகலாயர்கள் தலையில் அணியும் டர்பன் மற்றும் பெண்களின் அலங்கார உடைகள் அத்தனையும் மஸ்லின் துணியால்தான் தயாரிக்கப்பட்டன. இந்த மஸ்லின் துணிகள் ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்கும்கூட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. எகிப்தில், இறந்த உடலைப் பதப்​படுத்திய பிறகு சுற்றுவதற்குக்கூட மஸ்லின் துணிதான் பயன்படுத்தப்பட்டது.

'சர்கார் ஈஅலா’ எனும் மஸ்லின் துணிரகம், மொகலாய மன்னர்களின் தலைப்பாகை செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்டது. அதுபோலவே கஷிதா, குதான்ஈரூமி, நன்பதி, யகுதி, அலிஜோலா, சமந்த் ஈலகர், ரவை சல்லா மல்மல் ராஜா போன்றவை புகழ்பெற்ற மஸ்லின் துணி ரகங்கள். இந்தத் துணிகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது ஷப்னம் எனப்படும் மஸ்லின் ரகம். இது, நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அடி 40 ரூபாய் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. மஸ்லின் நூல் மிகவும் மெல்லியது. ஒரு நூல்கண்டின் நீளம் 119 மைல் என்கிறார்கள். அப்படி என்றால், அது எவ்வளவு மெலிதாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனைசெய்து பார்த்துக்கொள்ளுங்கள். அர்த்த சாஸ்திரம், மஸ்லின் துணிகளின் அழகைக் குறிப்பிடுகிறது. அதுபோலவே, பெரிபிலஸ் எழுதிய குறிப்புகளிலும் மஸ்லின் துணியின் நேர்த்தி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நேரு தனது 'கண்டுணர்ந்த இந்தியா’ என்ற புத்தகத்தில், மஸ்லின் துணி ஏற்றுமதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தும் அரிய துணிரகமாக மஸ்லின் விளங்கியது. நூர்ஜகான், மஸ்லின் துணிகளை விரும்பி அணிந்து இருக்கிறார். அத்துடன், நான்கு குடும்பங்களைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப நெசவு நெய்வதற்கு என்று நியமித்து இருக்கிறார். அதுபோலவே, அக்பர் காலத்திலும் மஸ்லின் விரும்பி அணியப்பட்டதைப் பற்றி, 'அயினி அக்பரி’ குறிப்பிடுகிறது. எளிய பருத்தி ஆடைகளை அணிவதில் ஆர்வம்கொண்ட ஒளரங்கசீப், மஸ்லின் துணியால் ஆன தலைப்பாகையை அணிய ஆர்வம் காட்டியிருக்கிறார். ஒருமுறை, அவரது மகள் ஜெபுன்னிஸா எட்டு சுற்று மஸ்லின் ஆடையை அணிந்து வந்தபோதும் அது உடலைக் கவர்ச்சியாகக் காட்டுவதாகச் சொல்லி அந்த உடையை மாற்றிவிட ஒளரங்கசீப் உத்தரவிட்டார் என்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த வெண்ணிற உடை மெலிதானது. ஒவ்வோர் ஆண்டும் டாக்கா நெசவாளிகள் தாங்கள் நெய்த சிறப்பான மஸ்லின் துணிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று மன்னர்களுக்கு பரிசாகத் தருவது வழக்கம். அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டு அதற்குப் பதில் மரியாதையாக நிலமும் பரிசுப் பொருட்களும் மன்னர்கள் வழங்கி இருக்கின்றனர்.


ஜம்தானி என்ற மஸ்லின் துணி மிகவும் உயர்தர​மானது. இதில் உருவாக்கப்பட்ட சேலைகளைத்தான் மகாராணிகள் அணிந்தனர். பத்து முழச் சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்கு அது மிருதுவானது. இந்த ஜம்தானி நெசவு நெய்வது கடினமான பணி. இதில் தேர்ந்த குடும்பங்கள் டாக்காவைச் சுற்றிலும் ஏராளமாக இருந்தன. இன்றும் ஜம்தானி ரகம் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் மொகலாயர் கால வேலைப்பாடுகள் இன்று சாத்தியமாகவில்லை.

மஸ்லின் நெசவாளிகளைப் பற்றி குறிப்பிடும் டாக்டர் ஜெயபாரதி, இரண்டு முக்கியத் தகவல்களைத் தருகிறார். மஸ்லின் நெசவாளர்கள், பஞ்சு நூலை  நூற்பதற்கு ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினார்களாம். அவர்களுடைய வலதுகை கட்டை விரலின் நகத்தை நீளமாக வளர்த்துவைத்திருப்பார்களாம். அந்த நகத்தின் நடுவில் சிறிய துளையைச் செய்து நூற்பதற்கு முன் பஞ்சைச் சற்று திரித்துக்கொண்டு அந்த துளைக்குள் நுழைத்துவிடுவார்களாம். பிறகு, அந்த நுனியை தக்கிலியில் இணைத்துவிட்டு நூற்பார்களாம். அவ்வாறு நூற்கப்படும் நூலை அடிக்கடி நகத்தால் மேலும் கீழுமாக வருடி நீவிவிடுவார்களாம்.

அந்த நூல் ஒரே சீரானதாகவும், பிசிறு இல்லாததாகவும் பாலிஷ் உடையதாகவும் மிகவும் மெல்லியதாகவும் வலுவானதாகவும் விளங்குமாம். இந்த நூலை வைத்துத்தான் டாக்கா மஸ்லினை நெய்வார்களாம். அந்தக் காலத்தில் டாக்கா மஸ்லினுக்கு உலகெங்கும் கிராக்கி இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் லாங்காஷர், லிவர்பூல் பருத்தித் துணிகளை இந்தியர்களின் மீது திணிக்கும்போது, டாக்கா மஸ்லினையும் வங்கத்து நெசவாளர்களையும் முதல் மிரட்டலாகக் கருதினர். ஆகவே, அந்த மஸ்லின் நெசவாளர்களைப் பிடித்து அவர்களுடைய நகங்களை வெட்டிவிட்டனர். எந்த நெசவாளரும் நகம் வளர்க்கக் கூடாது என்ற தடையும் விதித்து இருக்கின்றனர். சில இடங்களில் நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அப்படி நடைபெற்றதற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை................

எனது இந்தியா(எஸ்.ராமகிருஷ்ணன்)-2

எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

பரந்த இந்தியாவை ஒன்றுசேர்த்த முக்கியக் காரணியாக நெடுஞ்சாலைகளையும் ரயில் பாதைகளையும் குறிப்பிடுவேன். சாலைகள் மேம்பாடு அடைந்த காரணத்தால் வணிகச் சந்தையும், தபால் போக்குவரத்தும், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், பரவலான இடப்பெயர்ச்சி நடந்தது.

இன்று, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்ய எத்தனையோ நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் வரை செல்வதற்கு ரயில் பயணம் உதவுகிறது. சிதறுண்டுகிடந்த இந்தியாவை ஒன்றுசேர்த்தவை நெடுஞ்சாலைகளே. இந்தியாவின் நெடுக்காகப் பயணம்செய்யும் ஒருவர், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திலும் மாறுபட்ட உணவு வகைகள், பண்பாடு, பேச்சுமொழி இருப்பதை உணர முடியும். பன்முகக் கலாசாரமே இந்தியாவின் தனித்துவம். இந்தப் பண்பாட்டுக் கலப்பினை ஒருவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், அவர் சாலை வழியாக இந்தியாவில் பயணிக்க வேண்டும். உணவு, உடை, உபசரிப்பு, மொழி, நம்பிக்கை, சடங்கு மற்றும் கலை என்று எத்தனையோ மாறுபட்ட, தனித்துவமான கலாசார அம்சங்கள் இருக்கின்றன என்பதை நேரடியாக அறிய முடியும்.


இந்திய வரலாற்றின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அதன் நெடுஞ்சாலையின் வரலாறு. குறிப்​பாக, கிராண்ட் டிரங்க் ரோடு எனப்படும் இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலையானது மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப்பட்டது. கிழக்கில் வங்காள தேசத்தின் சிட்டகாங்கில் தொடங்கி கங்கை நதியோட்டத்தை ஒட்டியே நீண்டு வளைந்து கைபரைக் கடந்து, பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தானின் காபூல் வரை இந்தச் சாலை படுத்துக்கிடக்கிறது. அதாவது, இன்றுள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் என நீண்டு பாகிஸ்​தான் வழியாக ஆப்கானிஸ்தான் வரை செல்கிறது. 2,500 கி.மீ. தூரத்தை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையை 'உத்ர பாதை’ என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு, 'ராஜ பாதை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தியாவுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றம் ஏற்படுத்துவதற்காகவே இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. குறிப்பாக, தட்ஷசீலத்தில் இருந்து பாடலிபுத்திரம் வரை வணிகர்கள் சென்று வருவதற்கு முறையான பாதை தேவை என்று கருதியே இந்தச் சாலை அமைக்கப்பட்டது.

இந்தச் சாலையைப் பராமரித்தது சந்திர குப்த அரசின் படைப் பிரிவு என்பதால், பாதுகாப்பான பயணத்துக்கு உகந்ததாக இந்தச் சாலை கருதப்பட்டது. இதன் வழியாக மேற்கொள்ளப்பட்ட வணிகம் குறித்து மெகஸ்தனிஸ் தனது 'இண்டிகா’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். செலூகஸ் நிகோடரின் தூதராக மௌரியப் பேரரசரான சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் மெகஸ்​தனிஸ். எட்டு பகுதிகளைக்கொண்ட இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. 1846-ம் ஆண்டு ஸ்வான் பெகுக் என்பவர், சிதறிக்கிடந்த மெகஸ்தனிஸின் குறிப்புகளைத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார். ஜே.டபிள்யூ. மாக்ரின்டல் இதை கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'இண்டிகா’ நூலில் நம்ப முடியாத பல தகவல்கள் இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஒற்றைக் கால்கொண்ட மனிதர்கள் வசிக்கின்றனர், கொம்பு உள்ள குதிரைகள் இருந்தன, பாதங்கள் வரை காது வளர்ந்த மனிதர்கள் வாழ்ந்துவந்தனர், ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு மூக்கே கிடையாது என்பதுபோன்ற மெகஸ்தனிஸின் குறிப்புகள் வாய்மொழியாகக் கேட்டறிந்த பொய்த் தகவல்களாகவே இருக்கின்றன. ஆனாலும், அவர் மௌரிய அரசின் காலத்தில் நடந்த அரசியல் மற்றும் நிர்வாக முறைகள் பற்றி நிறையத் தகவல்களை வழங்கி இருக்கிறார்.

மெகஸ்தனிஸுக்கு இளம் வயதில் திக்குவாய் இருந்தது. ஆகவே, அவர் தனது இந்தியப் பயணத்தில் கேட்டறிந்த தகவல்களை வைத்தே தனது பயணக் குறிப்புகளை எழுதி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படுகிறது. 15 ஆண்டுகளை இந்தியாவில் கழித்த மெகஸ்தனிஸ், கிராண்ட் டிரங்க் ரோடு குறித்த பதிவுகளை துல்லியமாக எழுதி இருக்கிறார். புரஸ்பூர், ஹஸ்தினாபூர் கன்யகுப்ஜா, பிரயாகை, பாடலிபுத்திரம், தாமிரலிப்டா மற்றும் தட்ஷசீலம் ஆகிய ஏழு நகரங்கள் இந்தச் சாலை வழியாக இணைக்கப்பட்டு இருந்தன. இன்று, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து 32 கி.மீ. தூரத்தில் தட்ஷசீலம் நகரத்தின் அழிந்துபோன மிச்சங்கள் காணப்படுகின்றன. புத்த ஜாதகக் கதைகள் தட்ஷசீலம் குறித்து நிறையத் தகவல்களை நமக்குத் தருகின்றன. முக்கிய பௌத்த ஸ்தலமாக விளங்கிய தட்ஷசீலம் அன்று, முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக இருந்தது. அத்துடன், சிறப்பான கல்விச் சாலைகள் அங்கே அமைந்திருந்த காரணத்தால் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்றுக்கொள்ள தட்ஷசீலத்துக்கு வந்திருக்கின்றனர்.

அந்தக் காலங்களில், ஒரு பையன் எட்டு வயது வரை வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, 12 வயது வரை ஆசிரமத்தில் கல்வி கற்பான். அது முடிந்து, உயர்கல்வி கற்க விரும்புகிறவர்கள் தட்ஷசீலத்தைத்தான் தேர்வு செய்வர். அங்கே, ஏழு ஆண்டுகள் ஆசிரியருடன் தங்கிப் பயிலும் மாணவர்கள், அறிவியல், தத்துவம், வானவியல், கணிதம், கவிதை, மெய்ஞானம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றனர். இப்படிக் கல்வியின் பொருட்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு, கிராண்ட் டிரங்க் ரோடு முக்கியப் பயண வழியாக இருந்தது.  மௌரிய அரசர்களைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. குறிப்பாக, அகப்பாடல் ஒன்றில்,

''மோகூர் பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த'' (அகம்  251)

என்ற குறிப்பு காணப்படுகிறது. நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களை, புதியவர்கள் என்ற பொருளில் வம்ப மோரியர் என்கிறார்கள். மேலும், தனது கட்டுரை ஒன்றில் வரலாற்று அறிஞர் கணியன் பாலன், அசோகர் தனது 32 கல்வெட்டுக்களில் இரண்டு கல்வெட்டுக்களில் மட்டுமே தனது எல்லைக்கு அப்பால் உள்ள அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் என்ற அரிய தகவலைத் தருகிறார். அதன்படி, இரண்டாவது மற்றும் 13-வது கல்வெட்டுக்களில் தமிழகத்தை ஆண்ட அரசுகளின் பெயர்கள் வருகின்றன. இரண்டாவது கல்வெட்டில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மருத்துவப் பணிகளை எந்தெந்தப் பகுதிகளில் செய்கிறேன் என்பதைச் சொல்லவந்த அசோகர்... சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரளப் புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில் சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். 13-வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ வேண்டும் என்று சொல்லவந்த அசோகர், முதலில் கிரேக்க அரசர்களின் பெயர்களையும் சோழர்கள், பாண்டியர்கள் என இரு தமிழ் அரசர்களின் பெயர்களையும் பின்னர் குறிப்பிடுகிறார் என்கிறார்.

சாலைகளை மேம்படுத்தியதில் மௌரியர்கள் காட்டிய கவனம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் விளைவாக​வே, கிராண்ட் டிரங்க் ரோடு சிறப்பாக அமைக்கப்​பட்டது. மௌரியர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையை முறைப்படுத்தியவர் ஷெர் ஷா சூரி. இவர், 16-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சூர் வம்சத்து அரசர். தபால் மற்றும் போக்குவரத்துக் காரணங்களுக்காக ஷெர் ஷா சூரி, இந்தச் சாலையை மேம்படுத்தினார். குறிப்பாக, சாலையோர உணவு விடுதிகள், தங்கும் இடங்கள் அமைத்ததோடு வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க சாலை முழுவதும் மரங்களை நட்டார் ஷெர் ஷா. இந்தச் சாலையை பராமரிப்பதற்கு என்றே தனியாக ஒரு துறையை உருவாக்கி சிறப்பு ஊழியர்​களையும் நியமித்தார் ஷெர் ஷா. சாலையில் ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் ஒரு மைல்கல் அமைக்கப்பட்டதுடன், சுமைகள் கொண்டு​செல்பவர்கள் இளைப்பாறிக்கொள்ள சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. நீண்ட தூரம் குதிரைகளில் பயணம் செய்பவர்கள், இரவில் தங்கும்போது குதிரைகளுக்கு வைத்தியம் செய்வதற்கு என்று மருத்துவ நிலையங்களும் அமைக்கப்பட்டன. ஷெர் ஷா சூரி அமைத்த மைல் கற்களையும் சாலையோர விடுதிகளையும் இன்றும் டெல்லி அம்பாலா நெடுஞ்சாலையில் காணமுடிகிறது. இந்தச் சாலை போர்ப் படைகள் செல்வதற்கு வசதியாக அகலமாகவும் உறுதியாகவும் ஆற்று வழிகளில் பாலங்களுடன் உருவாக்கப்பட்டு இருந்தன.

ஷெர் ஷா சூரியின் மறைவுக்குப் பிறகு, இந்தச் சாலையை மொகலாயர்கள் மேம்படுத்தி தங்கள் யுத்த செயல்பாட்டுக்கு உகந்ததாக மாற்றிக்கொண்டனர். அதை, பிரிட்டிஷ் படையினர் தங்கள் வசமாக்கிக்கொண்டு அவர்களே இந்தச் சாலைக்கு கிராண்ட் டிரங்க் ரோடு என்று பெயர் சூட்டினர். சாலைகளின் பாடல்களைக் கேட்க முடிந்தவர்கள் வரலாற்றில் மறைந்துபோன நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும் என்பார்கள். அப்படியான ஒரு வரலாற்றுச் சின்னமாக கிராண்ட் டிரங்க் சாலை  இருக்கிறது. நான்கு நூற்றாண்டுகளாக இந்தச் சாலையின் வழியே எத்தனை பேர் கடந்து சென்றனர். எவ்வளவு முக்கியச் சம்பவங்களுக்கு இந்தச் சாலை சாட்சியாக இருந்தது என்பது வியப்பு ஏற்படுத்தக்கூடியது. இந்தச் சாலை பெர்சிய, கிரேக்கப் படைகளைப் பார்த்து இருக்கிறது. மங்கோலியர்களும் ஹீனர்களும் இதன் வழியாகச் சென்று இருக்கின்றனர். மொகலாயர்கள் இந்தியாவுக்குள் இந்தச் சாலை வழியாகவே வந்து சேர்ந்தனர். சாலை என்பது பயணிகள் பயணம் செய்வதற்காக மட்டும் இல்லை. அதன் வழியே மிக முக்கியமான வணிகப் பொருட்களான சீனப் பட்டு, அரேபிய வாசனைப் பொருட்கள், காபூல் மது, கலைப்பொருட்கள் ஆகியவை பாடலிபுத்திரத்தில் உள்ள சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும், இந்தச் சாலையில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். குற்றத்தை விசாரிப்பதற்கு தனி நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். சௌக்கீ எனப்படும் ஓய்வு விடுதிகள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்தன. சுங்கச் சாவடிகள் அமைத்து வரி வசூல் செய்யப்பட்டது. சாலை எந்த நகரத்தை நோக்கிச் செல்கிறது என்பதை அடிப்படையாக வைத்து சுங்க வரி வசூலிக்கப்பட்டது.....

எனது இந்தியா(எஸ்.ராமகிருஷ்ணன்)-1

எனது இந்தியா (மங்கம்மாள் சாலை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

18-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்த இந்தச் சுங்க முறை, வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. பனாரஸ் நகரை நிர்வாகம் செய்த டங்கன் என்ற ஆங்கிலேய அதிகாரி, இந்தச் சுங்க வரியை முழுமையாக ரத்துசெய்து, பனாரஸுக்கு வருபவர்கள் இலவசமாக சாலையைப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். பஞ்சாபுக்கும் வடமேற்கு எல்லைப் பகுதிகளுக்கும் செல்வதற்கான பிரதான சாலையாக கிராண்ட் டிரங்க் சாலையை பிரிட்டிஷ் நிர்வாகம் பயன்படுத்தியது. குறிப்பாக, ராணுவத்தினருக்கான கன்டோன்மென்ட்கள், குடியிருப்புகள், படைப் பிரிவின் காப்பகங்கள் இந்தச் சாலையோர நகரங்களில் அமைக்கப்பட்டன. கிராண்ட் டிரங்க் சாலையை ஒட்டிய நகரங்களில் குடியிருந்த சீக்கியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட நல்லுறவால் இங்கிலாந்துக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீக்கியர்கள், அதிக அளவில் இங்கிலாந்தில் குடியேறினர்.

ஷெர் ஷா சூரி எனப்படும் ஷேர் கான் ஐந்து ஆண்டுகளே டெல்லியை ஆட்சிசெய்து இருக்கிறார். பாபரின் படையில் தளபதியாக இருந்த ஷேர் கான், பீகாரின் கவர்னராகப் பணியாற்றிய பிறகு அரியணையைக் கைப்பற்றினார். ஷேர் கான் காலத்தில்தான் ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டது. அன்று, ரூபாய் எனப்பட்டது காகிதப் பணம் அல்ல. அது, வெள்ளி நாணயம். 178 கிராம் எடைகொண்ட அந்த நாணயமே, ரூபாய் என்று அழைக்கப்பட்டது. உங்கள் வாழ்நாளில் ஒரு முறை இந்த நீண்ட சாலையில் பயணம் செய்யதால், அது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ருடியாட் கிப்ளின் தனது 'கிம்’ நாவலில் இந்த கிராண்ட் டிரங்க் சாலையின் பெருமைகளை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்து இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய மூன்று தேசங்களின் ஊடாகச் செல்லும் கிராண்ட் டிரங்க் ரோடு, வெறும் பயணச் சாலை அல்ல. அது, வரலாற்றின் அழியாத சாட்சி. அந்த சாட்சியத்தின் அடையாளமாகவே இன்றும் நாம் சிதைந்துபோன பழங்காலச் சத்திரங்கள், ஓய்விடங்களைக் காண முடிகிறது. அந்த இடிபாடுகள் காலத்தின் பசுமை​யான நினைவுகளுடன் தனிமையாக, தனக்குத்தானே கடந்த காலத்தின் பாடல்களை முணு​முணுத்துக்​கொண்டே இருக்கின்றன.


கிராண்ட் டிரங்க் சாலையைப் போல மிக நீண்ட தூரம் கொண்டதாக இல்லாதபோதும், மங்கம்மாள் சாலை வரலாற்றுச் சிறப்புமிக்கது. காரணம், அதுதான் தென் தமிழ்நாட்டின் பிரதான சாலை. இந்தச் சாலையை உருவாக்கியவர் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள். அவர் தனது ஆட்சிக் காலத்தில் பல அரிய அறச்​செயல்களைச் செய்து இருக்கிறார். குறிப்பாக, மதுரையில் பெரிய அன்னச்சத்திரம் ஒன்றை அமைத்தார். அது, 'மங்​கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. அதுபோலவே, புதிய சாலைகள் பலவற்றை அமைத்து இருக்கிறார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, 'மங்கம்மாள் சாலை’ என்றே அழைக்கப்படுகிறது. பயண வழியில் தாகம் தீர்த்துக்கொள்ளத் தண்ணீர்த் தொட்டிகளும் கிணறுகளும் குளங்களும் உருவாக்கப்பட்டன. பொதி ஏற்றுச் சென்று விற்பனைசெய்து வருவதற்கு வசதியாக இந்தச் சாலை அமைக்கப்பட்டது.

மதுரை - கன்னியாகுமரி சாலையில் 108 சத்திரங்களைக் கட்டி, பயணிகளுக்கு சௌகரியம் செய்து தந்திருக்கிறார் ராணி மங்கம்மாள். அப்படி உருவாக்கப்பட்ட சத்திரங்களில் பல இன்றும் இடிந்துபோன நிலையில் சாலையோரம் இருப்பதைக் காணலாம். மங்கம்மாள் சாலை முக்கியமான வணிகப் பாதையாக விளங்கியது. இதன் காரணமாக, சாலையைப் பிரதானப்படுத்தி சிறிய நகரங்கள் உருவாகின. மாட்டு வண்டிகளை நிறுத்த வண்டிப் பேட்டைகள் அமைக்கப்பட்டன. அரசியல்ரீதியான நெருக்கடியான காலத்தில் மங்கம்மாள் மதுரையை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்கர் இறந்தவுடன் அவரது மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் கி.பி.1659-ல் ஆட்சிக்கு வந்தார். இவர், சுமார் நான்கு மாதங்களே ஆட்சி புரிந்து உயிர் துறந்தார். அவருக்குப் பின், அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியை ஏற்றபோது இளைஞராக இருந்தார். இதனால், அங்குத் தளவாயாகப் பணிபுரிந்த லிங்கம நாயக்கரும் பிரதானிகளும் சேர்ந்து சதிசெய்து, அவரைப் பொம்மை அரசனாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.


அந்தக் காலகட்டத்தில், செஞ்சி நகரம் பீஜப்பூர் சுல்தானின் ஆட்சியில் இருந்தது. மன்னர் சொக்கநாதரின் இசைவைப் பெறாமல் லிங்கம நாயக்கரும் அவரது கூட்டாளிகளும் செஞ்சி மீது போர் தொடுப்பதாக அறிவித்து, போர்ச் செலவுக்காக மக்களிடம் அநியாயமாக வரி வசூல் செய்தனர். இதை உணர்ந்த சொக்கநாத நாயக்கர், தன்னைச் சுற்றிய சதி வலையை முறியடித்து தனது அதிகாரத்தைக் கைப்பற்றி முழு உரிமையோடு நாடாளத் தொடங்கினார்.

சொக்கநாதர் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் மறக்க முடியாதது. பஞ்ச நிவாரணத்துக்கு சொக்கநாதர் நிறைய அரும்பணிகளைச் செய்தார். கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. ஆடு, மாடுகளுக்கான தீவனங்கள் வழங்கப்பட்டன. பஞ்ச நிவாரணப் பணிகளை திறமையாக மேற்கொண்டார் சொக்கநாதர். ஆனால், போதுமான பொருளாதார உதவிகள் கிடைக்காத காரணத்தால், பஞ்சத்தில் பல ஆயிரம் பேர் இறந்தனர்.

இன்னொரு பக்கம், பஞ்சத்தால் உணவின்றி வாடிய மக்களுக்கு டச்சு வணிகர்கள் உணவு, உடை கொடுத்து மதமாற்றம்செய்ய முயற்சித்தனர். சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பிறகு, முத்து வீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, உடன்கட்டை ஏறாமல் குழந்தை விசயரங்க சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டி, மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினார். கி.பி. 1689-ல் இருந்து 1706 வரை மங்கம்மாளின் ஆட்சி நடைபெற்றது.

சாலைகள் அமைக்கவும் சந்தைகள் உருவாக்கவும் மங்கம்மாள் பெரும் செலவு செய்தார். தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் ராணி மங்கம்மாள் அமைத்தவை. அவற்றை ஒட்டி உருவான புதிய நகரங்களே, இன்றைய முக்கிய நகரங்களாக விளங்கும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, கயத்தாறு போன்றவை. இன்றும், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை மங்கம்மாள் சாலை என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கம்மாள் இந்தச் சாலையை அமைத்ததைப் பற்றி வாய்மொழிக் கதை ஒன்று இருக்கிறது. விரத நாட்களில் மங்கம்மாள் வெற்றிலை போடுவது கிடையாது. அதை மறந்து ஒரு நாள் அவள் இடது கையால் வெற்றிலை போட்ட காரணத்தால், அதற்குப் பரிகாரமாக மக்களுக்குப் பயன்படும் சாலையை அமைத்துக் கொடுத்தாள் என்று கூறுகிறது ஒரு நாட்டுப்புறக் கதை. ஆனால், வளர்ந்துவரும் சந்தை வணிக முயற்சிகளை மேம்படுத்தவும், படைகள் சென்று வருவதற்கும் உதவியாகவே மங்கம்மாள் சாலைகள் அமைத்தார் என்கிறது வரலாற்றுச் செய்திகள்.

நீண்ட தூரம் சாலைகள் அமைப்பது எளிதான பணி அல்ல. பல்வேறு ஊர்களில் சாலை போடுவதற்கான நிலம் கைவசப்படுத்துவதிலும், சாலை எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதிலும் பிரச்னைகள் ஏற்பட்டன. இதைச் சமாளிக்க உள்ளூர் இனக்குழுத் தலைவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினார் மங்கம்மாள். ஒவ்வொரு நாளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோயிலில், 'ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகிவிட்டது...’ என்று தெரிந்த பிறகுதான் மங்கம்மாள் சாப்பிடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. தென் தமிழகத்தில் இன்னும் பல ஊர்களின் பெயர் சத்திரம் என்ற பெயரில் ஆரம்பிப்பது மங்கம்மாள் உருவாக்கிய சத்திரங்களின் நினைவில்தான். கோடை காலத்தில் மங்கம்மாள் தங்குவதற்காக கட்டிய அரண்மனையே இன்று காந்தி மியூசியமாக உள்ள மங்கம்மாள் அரண்மனை. தமுக்கம் என்றால் யானைகளைப் போருக்கு அனுப்பும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள். யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானம், இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும்.

1670-ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், கர்நாடக நவாப் வசமானது. அதன் பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1959-ம் ஆண்டில் காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. காந்தியடிகளின் நினைவாக, முதன்முதலில் மதுரையில்தான் மியூசியம் ஆரம்பிக்கப்​பட்டது. அதன் பிறகே புதுதில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் காந்தி மியூசியங்கள் தொடங்கப்பட்டன.

தங்க நாற்கரச் சாலைகளின் வருகை இன்று போக்குவரத்தை எளிமையாக்கிவிட்டன. அதே நேரம், சாலைப் பயணத்தில் கண்ணில் படும் மனிதர்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், மர நிழலின் அருமை, அருகில் உள்ள கிராமங்களின் வாழ்க்கை, சிறுவணிகம் அத்தனையும் அகற்றப்பட்டு​விட்டன. இன்று, பாலை நிலத்தில் பயணம் செய்வதுபோல நெடுஞ்சாலைப் பயணத்தில் மனித நடமாட்டமே கண்ணில்படுவது இல்லை. கிராண்ட் டிரங்க் சாலையும் மங்கம்மாள் சாலையும் இன்று தங்க நாற்கரச் சாலையின் மறுஉருவாக்கத்தில் அடையாளம் இழந்துவிட்டன. ஆனாலும், மக்கள் நினைவில் இந்தச் சாலைகள் வரலாற்றின் அழியாத சாட்சியாகவே இருக்கும்...................